கரூர்:கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் மட்டும் நாளை விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகவில்லை எனத் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் மதியழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மதியழகன் கூறுகையில், “தமிழ்நாட்டில் நாளை (ஏப்.13) சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய திரைப்படமாக உள்ளது. இந்நிலையில், கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் மட்டும் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
’மாஸ்டர்’ திரைப்படத்திற்குப் பிறகு 15 மாதங்கள் கழித்து ’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் இதுகுறித்து காரணத்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். கரூர் மாவட்டத்தில் மல்டி பிளெக்ஸ் தியேட்டர் இல்லாத சாதாரணமான திரையரங்குகள் இருக்கும் குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்:கரூர் மாநகராட்சி திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ முடிவினை மறுபரிசீலனை செய்து நாளை விஜய் திரைப்படத்தை வெளியிட முன்வர வேண்டும். விஜய் ரசிகர்கள் அருகில் உள்ள திரையரங்கில் சென்று திரைப்படத்தைப் பார்த்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்ட நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், கரூர் நகர்ப் பகுதியில் வெளியாகாத செய்தி அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கரூர் நகர்ப் பகுதியில் திரைப்படம் வெளியாகாது எனச் செய்தி கேள்வியுற்றுப் பல விஜய் ரசிகர்கள் அழுது கொண்டிருப்பதாக வரும் செய்தி வருத்தம் அளிக்கிறது. எனவே, எனவே கரூர் மாநகராட்சி திரையரங்கு உரிமையாளர்கள் முடிவினை மறுபரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட நிர்வாக ரீதியான பிரச்னையைத் தீர்த்து திரைப்படத்தை வெளியிட முன்வர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
விலை விவகாரத்தால் வெளியிடவில்லை: திருச்சி மண்டல விநியோகஸ்தர் ஜி.தியாகராஜன் பீஸ்ட் திரைப்படத்தை திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர், மாயவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பிட்ட விலைக்குத் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளார். ஆனால், அதே விலைக்குக் கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் திரைப்படத்தை வாங்கிட வெளியிட மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதுவே, கரூர் மாநகரில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாமல் இருக்க காரணம் என்கின்றனர், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நெருக்கமானவர்கள்...
இதையும் படிங்க:'பீஸ்ட்' திரைப்படத்திற்கு அதிக விலையில் டிக்கெட் - விஜய் ரசிகர்கள் சாலை மறியல்!