கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தெற்கு காந்திகிராமம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அதிமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான கலை அரசி, அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக வாக்காளர் பட்டியல் மூலம் வாக்காளர் ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 74 வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ. 2 லட்சட்து 22 ஆயிரம் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஒரு நாள் முன்பு தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கே.என். நேரு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!