கரூர் மாவட்டம், புலியூரை அடுத்து உள்ளது கட்டளை கிராமம். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காவேரி கூட்டுக் குடிநீர் திட்டக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் கட்டளைப் பகுதியில் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் இரண்டு ஏக்கரை தனிநபர் ஒருவர் வாங்கி, அதில் ராட்சதக் கிணறு வெட்டி, அதிலிருந்து சுமார் 800 ஹெச்.பி மோட்டார் பொறுத்தி வெள்ளியணை பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் முன்னதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், அனுமதியின்றி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தும் சென்றுள்ளனர். ஆனால், அனைத்தையும் மீறி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி, அப்பகுதி விவசாயிகள் கட்டுமானப் பகுதியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் வறட்சி ஏற்படும்போது இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். இப்பகுதிகள் பாலைவனமாக மாறுவதற்குள் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க....கேட்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னமான ‘ஆயி மண்டபம்’ : கண்டுக்கொள்ளுமா அரசு!