கரூரில் கரோனோ வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசவம், டயாலிஸிஸ், புற்று நோய் பாதித்தவர்கள் போன்றவர்களுக்கு தேவைப்படும் ரத்தம் வழங்குவதற்காக திமுக சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் மட்டும் திமுகவினர் 1,005 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். இதன் மூலம் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 635 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் ரத்தம் தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரூர் மாவட்ட ஆட்சியர் அரசு சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடத்துகையில் அரவக்குறிச்சி எம்எல்ஏ என்ற முறையில் ஒருமுறைகூட அழைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்கும் எனக்கு முறையான அழைப்பு கொடுக்காமல் கூட்டம் நடத்துவது தவறானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஒருதலைபட்சமாக மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டார்.
மேலும் திமுகவினர் தன்னை மிரட்டியதாகவும், அதற்கான காணொலி பதிவு உள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவர் இதுவரை அதற்கான காணொலி பதிவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. இதற்காக அவர் நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்கும் நிலையை உருவாக்குவோம்" எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு