கரூர்: Video: கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலவிடுதி ஊராட்சி சாத்துவார்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி.
இவர், பாலவிடுதி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், கடன் பெறுவதற்காக விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 21) மதியம் 12 மணியளவில், பாலவிடுதியிலுள்ள வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார்.
சாதியத் தாக்குதலா?
அப்போது, பாலவிடுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றும் மாரிமுத்து, வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால், தலைவர் மனது வைக்காமல் விண்ணப்பத்தை ஏற்க முடியாது எனத் திருப்பி வழங்கியுள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட விவசாயி மூர்த்தியை தரக்குறைவாக பேசியதுடன், மூர்த்தி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒருமையில் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்ளூர் அரசியல்
மேலும், இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை உண்டாக்கி இருக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மூர்த்தியிடம் கேட்டபோது, "கடவூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக உள்ள செல்வராஜ், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்தபோது பாலவிடுதி கூட்டுறவுக்கடன் சங்கத்தில் தலைவராக இருந்தார். இப்போது திமுகவில் இணைந்த பின்னரும் தலைவராக உள்ளார். செல்வராஜின் தயவு உள்ளவர்கள் மட்டுமே பாலவிடுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது.
திமுக அரசு தற்போது அறிவித்துள்ள சிறப்பு முகாமினை பயன்படுத்தி கடன் பெறுவதற்காக விண்ணப்பம் அளித்தும் கடந்த மூன்று மாதங்களாக சொத்து மதிப்பு படிவம் அடங்கல் எனப் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு திருப்பி அனுப்பி வந்தனர்.
அதிமுக டூ திமுக
இதுகுறித்து வங்கியில் பணியாற்றும் அலுவலர்களான கனகவேல், சின்னத்துரை, மணியரசன் ஆகியோரிடம் கேட்டால், வங்கி மேலாளர் மாரிமுத்து தான் முடிவெடுப்பார் எனக் கூறினர். இதையடுத்து, விவசாயி மூர்த்தியிடம் கேட்டபோது, 'பொது இடத்தில் என்னை சாதிப் பெயர் சொல்லி தரக்குறைவாகப் பேசினார்.
அதனால், வங்கியில் தலையீடு செய்துவரும் தலைவர் செல்வராஜ், மணியரசன், வங்கி மேலாளர் மாரிமுத்து ஆகியோர் மீது முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏழை விவசாயியான தனக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, பாலவிடுதி கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகப் புகார் எழுந்தது.
வங்கியில் தலைவராக இருந்த செல்வராஜ், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்திருப்பதும், தற்போது திமுகவில் இணைந்த பிறகும் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்வதும் திமுகவினர் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.