கரூர்: வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் கௌசிக் (21), தினகரன்(23). இவர்கள் இருவரும் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று (செப்.14) மாலை தங்களது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் பாகநத்தம் நெடுஞ்சாலையில் சென்றபோது சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்தியுள்ளனர்.
கொலைவெறி தாக்குதல்
அப்போது பாகநத்தம் பகுதியைச் சேர்ந்த சில ஆதிக்க சாதி இளைஞர்கள், சாதி விவரத்தைக் கேட்டு, பட்டியலின இளைஞர் கௌசிக் மீது சரமாரியாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் கௌசிக் (21) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இளைஞரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் கராத்தே இளங்கோ, கண்மணி ராமச்சந்திரன், உதயா உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
விரைந்து கைது செய்ய கோரிக்கை
தொடர்ந்து ஈடிவி பாரத்துக்கு பேட்டியளித்த விசிக தொண்டர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜா, ”கரூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிப்பட்டி இளைஞர்களிடம் சாதி பெயர் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க : கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்!