கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த காந்தி சிலை நேற்று முன்தினம் (பிப்.19) அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுகூடி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஜோதிமணியை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அவருடன் பெண்கள் உள்பட 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை வாகனத்தில் இருந்தபடியே பேசி ஜோதிமணி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எடப்பாடி ஆட்சி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு புதிய காந்தி சிலை அமைப்பதற்கான பணிகளின் ஊழல்களை சுட்டிக் காட்டுவதற்கு மக்களவை உறுப்பினர் என்ற முறையில் எனது கடமையை செய்தேன். மக்களவை உறுப்பினர் என்றும் பாராமல் அலங்கோலப்படுத்தி அசிங்கப்படுத்தி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த அதிமுக நிர்வாகிகள் இன்னும் வெளியே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் எவ்வளவு அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காவல் துறையினரை ஏவி விட்டு அராஜகம் செய்கிறார். இதுகுறித்து பெண்கள் அனைவரும் கேள்வி எழுப்புவார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி நிச்சயம் கவிலும். அவரது ஆட்சி எண்ணப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'நியாயம் தர்மம் எல்லாம் இல்ல... கேள்வி கேட்டா இதுதான் நெலம!' - வேதனையில் குமுறும் ஜோதிமணி