கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில், மூன்றில் அதிமுக போட்டியிடுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. இத்தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை களமிறக்கப்படுகிறார். இந்நிலையில் அவர் அத்தொகுதியிலுள்ள பள்ளப்பட்டியில் பரப்புரை செய்ய இஸ்லாமிய ஜமாத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக முன்னதாக செய்தி பரவியது.
கள நிலவரம்
’இஸ்லாமிய பெண்கள் அனைத்துக்கட்சி பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மதக்கோட்பாடுகளுக்கு முரணாக அவ்வாறான கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்’ எனக் குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பியதாக ஜமாத் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தொடர்ந்து, பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச்.27) பள்ளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக கரூர் மாவட்ட எஸ்.பி மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பரப்புரையில் அவர் மக்களிடையே பேசியதாவது: ”கடந்த ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய மக்களை நல்லமுறையில் நடத்திவருகிறது. இதனால் நாட்டில் எங்கும் குண்டுவெடிப்பு நடைபெறவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆண்டபோது நாடு முழுவதும் குண்டுவெடிப்பு. ஏனென்றால் பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பதையே காங்கிரஸ் கட்சி நோக்கமாகக் கொண்டிருந்தது.
கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ”அண்ணாமலையை பள்ளப்பட்டி பகுதிக்குள் விடக்கூடாது. அவர் அங்கு சென்றால் மதக்கலவரத்தை தூண்டிவிடுவார்” எனப் புகாரளித்துள்ளார். நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். அக்கா ஜோதிமணி வகிக்கும் பதவிக்கு, இது ஒரு அவமானம். எனவே, ஜோதிமணி அக்கா, தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் அமர வேண்டும். மாறாக, பிரிவினைவாதத்தை தூண்டி விடக்கூடாது.
எங்களுக்கு அனைத்து மக்களும் சமம். பாஜகவின் அடிப்படை தத்துவமும் அதுதான். இங்கு ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் எனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்துள்ளனர். கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஐந்து முக்கிய வாக்குறுதிகளை பள்ளப்பட்டி மக்களுக்காகக் கூறியிருந்தார். பள்ளப்பட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதிதாக மசூதி, புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம், மின் மயானம் ஆகியவற்றை செய்து தருவதாகக் கூறியிருந்தார்.
ஆனால் இந்த ஐந்து வாக்குறுதிகளில் ஏதாவது ஒன்றை செந்தில் பாலாஜி நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார் என்று நீங்கள் இப்போது கூறினால் நான் எனது பிரசார வாகனத்தை திருப்பிக்கொண்டு அரவக்குறிச்சி சென்று விடுகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க:பள்ளப்பட்டி சம்பவம்: அண்ணாமலைக்கு ஆதரவாகக் களமிறங்கிய அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!