கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கடந்த 2 நாட்களாக கரூரில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையில் கரூர் செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன் கூறியதாவது, கரூர் நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளரும் அதிமுக முக்கிய தலைவருமான தம்பிதுரை நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவார். நேற்று கரூரில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் மேற்கொண்டதால் நல்ல வரவேற்பு தொகுதி முழுவதும் கிடைத்துள்ளது. அனைத்து தொகுதியிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நேற்று ஒரு கட்சி இன்று ஒரு கட்சி என்று இருக்கும் செந்தில் பாலாஜி எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல என்று கூறினார். மேலும் மக்கள் இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஐந்திற்கும் மேற்பட்ட கட்சிக்கு தாவியவர் என்று செந்தில் பாலாஜியை விமர்சித்துப் பேசினார்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியலினத்தவரிலிருந்து நீக்க கடந்த பல வருடங்களாக அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு முட்டுக்கட்டை போடுவது திமுகதான் என்று குற்றம்சாட்டினார்.