கரூர்: கரூரில் 7வது நாளாக புதிதாக மூன்று இடங்களில் வருமான வரித்துறை சோதனையை இன்று (ஜூன் 1) மீண்டும் தொடங்கியுள்ளனர். கடந்த மே 26 ஆம் தேதி தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கரூர் கொங்கு மெஸ் உணவகத்தின் உரிமையாளர் மணி, கல் குவாரி உரிமையாளர்கள் தங்கராஜ், ஏகாம்பரம், ஆசிட் டெக்ஸ் செல்வராஜ் உள்ளிட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
அப்போது திமுகவினர் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கூடி, வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நான்கு வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தான்தோன்றிமலை காவல் நிலையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை திமுகவைச் சேர்ந்த கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7வது நாளாக நீடிக்கும் சோதனை: இந்த நிலையில், இன்று 7வது நாளாக, கரூர் நகர பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் வீடு மற்றும் கரூர் கடைவீதி சாலையில் அமைந்துள்ள லாரி மேடு பத்திர எழுத்தாளர் செங்கோட்டையன் அலுவலகம், மாயனூர் எழுதியாம்பட்டி பகுதிக்கு செந்தில் பாலாஜி (Minister V.Senthil Balaji) அடிக்கடி சென்று வரும் ஃபாம் ஹவுஸ் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் மதியம் 12 மணியளவில் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர்.
இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 75-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளோடு கரூரில் கடந்த மே 26 ஆம் தேதி தொடங்கிய சோதனையின் போது, திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து இதற்காக நடந்த திமுகவினர் கைது, செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் வீடுகளில் செயின் லிங்க் போல, தொடர்ந்து இன்றும் 7வது நாளாக நடைபெறும் வருமான வரித்துறை சோதனை சோதனை, இன்னும் உச்சக்கட்டத்தை அடையவில்லை என்றே கூறலாம்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?: கரூர் வடக்கு காந்தி கிராமம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சங்கர் அலுவலகத்தில் பணியாற்றிய சோபனா பிரேம்குமார் வீட்டில் இரவு பகலாக ஆறு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் நிறைவு பெற்றது. இது சோதனையில் ஒப்பந்ததாரரின் அலுவலகத்தில் பணியாற்றிய சோபனாவிடம், நடத்திய விசாரணையில் வங்கி பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், அது குறித்தும் தொடர்ந்து தொடர்புடையவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொங்கு மண்டலத்தில் தக்கவைக்க பாஜகவின் திட்டமா?: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சுற்றி நடத்தும் வருமான வரித்துறை சோதனை, இந்து திருக்கோயில்களில் பரிவார தெய்வங்களை தரிசித்து விட்டு இறுதியில் மூலவரை தரிசித்துப்பதை போல, வருமான வரித்துறை சோதனை செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாக உள்ளவர்களின் வீடுகளில் முதல் கட்ட சோதனையை வருமான வரித்துறை நடத்தி வருகின்றனர் .இறுதி கட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறும் என தெரிகிறது.
தமிழகத்தில் இதுவரை, நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையைப் போல அல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை மையமாக வைத்து நடைபெறும் இந்த வருமான வரித்துறை சோதனை, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையை தகர்த்து, பாஜக கொங்கு மண்டலத்தில் வளரவிடாமல் தடுக்கும் செந்தில் பாலாஜியின் அசுர அரசியல் வளர்ச்சியை தடுக்கவே? வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதெல்லாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார். இதனிடையே, வெளிநாடு திரும்பிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை சுற்றி நடக்கும் வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக ஏவப்படுகிறது' என குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் உயரும் செந்தில் பாலாஜி செல்வாக்கு.. ரெய்டு மூலம் முடக்க அண்ணாமலை திட்டமா? பின்னணி என்ன..?