கரூர்: தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், அவர் தொடர்புடைய இடங்கள் எனக் கூறப்படும் 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (நவ. 3) அதிரடியாக சோதனையை துவக்கினர்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் எ.வ.வேலு தொடர்புடைய சுமார் 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை நேற்று (நவ. 3) காலை துவக்கினர். திமுக கரூர் மாவட்ட செயலாளராக இருந்தபோது, சாலை விபத்தில் மறைந்த வாசுகி முருகேசனின் சகோதரி வீடு அமைந்துள்ள கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியிலும், காந்திபுரம் அலெக்ஸ் நிதி நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய பகுதிகளில் விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
இதேபோல், புகலூர் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி திமுக முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று (நவ. 3) காலை 7 மணிக்கு துவங்கிய சோதனையை மாலை 6 மணி அளவில் முடித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து இன்று 3 இடங்களில், 2வது நாளாக வருமான வரித்துறையின் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கரூரில் நடைபெற்று வரும் இந்த வருமானவரித் துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்து உள்ளதால், மேலும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை கரூரில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பின்னர், அரசு மணல் குவாரிகளில் சோதனை நடத்தி முடித்து உள்ள சூழ்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கின?