கரூர்: வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன் உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி, கல்லா சீனிவாச ராவ், பங்கஜ் குமார் மற்றும் சுசில்குமார் உள்ளிட்ட 4 வருமான வரித்துறை அதிகாரிகளை சந்திப்பதற்காக இன்று (மே 28) வருகை தந்தனர்.
இதனையடுத்து சரியாக மதியம் 12 மணியளவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வருமான வரித்துறை அதிகாரிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருமான வரித்துறை இயக்குநர் சிவசங்கரன், “வருமான வரித்துறை சோதனைக்குச் சென்ற பெண் அதிகாரி உள்பட 4 பேரையும் திமுகவினர் தாக்கி உள்ளனர்.
திமுகவினர் தாக்கியதில் பெண் அதிகாரிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்ற மூன்று அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மனதளவில் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி செய்யச் சென்ற இடத்தில் ஆவணங்களை பறித்தவர்கள் மீது மேலும் வழக்குகள் பதியப்படும்.
முதல் கட்டமாக உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் இன்று 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதற்கான வீடியோ மற்றும் மீடியா ஆதாரங்கள் உள்ளது.
பொதுமக்களும் அதனை நேரில் பார்த்தனர்” என கூறினார். இதனையடுத்து, பெண் அதிகாரி திமுக தொண்டர் ஒருவரை தாக்கியது குறித்த கேள்விக்கு, “ஆதாரம் இருந்தால் காண்பிக்கச் சொல்லுங்கள். வருமான வரித்துறையினர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாங்கள் என்ன பயந்து ஓடி விடுவோமா?” என்றார்.
தொடர்ந்து, கரூரில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் வருமானவ ரித்துறை சோதனை குறித்து கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன், “சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து தலைமையிடத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, 3வது நாளாக இன்று காலை மீண்டும் தொடங்கிய வருமான வரித்துறையினரின் சோதனை கொங்கு மெஸ் மணி உணவகம், நெடுஞ்சாலைத் துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் பிரேம்குமார் என்பவரது மனைவி ஷோபனா ஆகியோரது வீடு ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: Karur IT Raid: 3வது நாளாக சோதனை.. 8 திமுகவினர் கைது.. கரூரில் நடப்பது என்ன?