கரூர்: புகலூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி ஆட்டோ பைனான்ஸ், சிவபார்வதி பைனான்ஸ், எஸ்.ஜி பைனான்ஸ் ஆகிய 3 தனியார் நிதி நிறுவனத்தை 15 பேர் கொண்ட நபர்கள் நடத்தி வந்துள்ளனர்.
அந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தால், இரட்டிப்பாக பணம் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி, 5 கோடி ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றியதாக கரூர் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனிநபர்களிடமிருந்து, கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்குப் புகார் வந்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் 3 நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 15 பங்குதாரர்களில் விஜயகுமார், குணசேகரன், தங்கராசு, முருகன், சுரேஷ், பெரியசாமி, சதீஸ்வரன், கனகராஜ், செல்வராஜ், கந்தசாமி உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்து தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
நிதி நிறுவனத்தில் இருட்டிப்பு பணம் தருவதாக மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் தொடர் விசாரணையை நடத்தி முடித்த கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் குறைந்த வட்டியில், கடன் தருவதாக உள்ளூர் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
அந்நிறுவனங்களில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அதிக வட்டி தருவதாக பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடிகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால், மாநில அளவில் இதுபோன்ற உள்ளூர் நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கு ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டும் என மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், உள்ளூர் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகவும் கூறி அதிக வட்டி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கந்து வட்டி, மீட்டர் வட்டி என மக்களை மிரட்டி பண வசூல் வேட்டை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசும் காவல்துறையும் தடுக்க முன்வர வேண்டும் என சாமானிய மக்கள் நலக்கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கார் திருட்டு - 2 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்!