கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) அகில இந்திய கிறிஸ்துவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தின் சார்பில் நிறுவனரும் தேசிய பொதுச்செயலாளருமான ஏ.ஜி.ஜோஸ்வாஸ் ஸ்டீபன் தலைமையில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இதுகுறித்து அகில இந்திய கிறிஸ்துவ வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தேசிய பொதுச்செயலாளருமான ஏ.ஜி.ஜோஸ்வாஸ் ஸ்டீபன் கூறுகையில், “இந்து முன்னணி நிர்வாகிகள் கிறிஸ்துவ சேவகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள செம்மேடு அருகே உள்ள ஹைஸ்கூல் மேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞர் கிறிஸ்தவ சபை ஒன்றில் ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றி அவர் வறுமையில் தவித்து வந்ததால் அப்பகுதியில் உள்ள திருச்சபை ஒன்றின் போதகர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் நிதி உதவியும் செய்துவிட்டு வந்துள்ளார்.
![காவல் துறையில் புகார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-kristian-van-attack-karur-rss-member-town-police-case-register-news-vis-scr-tn10050_09082021004442_0908f_1628450082_894.jpg)
இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மனோ ரஞ்சித், மணி, உள்ளிட்ட மூன்று பேர் சந்தோஷ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால் காயமடைந்த சந்தோஷ்குமார் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட துடன் வெங்கமேடு போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு காரணமான இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விரும்பிய தெய்வத்தை வழிபடுவதற்கு தனி மனித உரிமை சட்டத்தில் இடம் உள்ளபோது, இந்து முன்னணியினர் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
![வேன் மீது தாக்குதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-kristian-van-attack-karur-rss-member-town-police-case-register-news-vis-scr-tn10050_09082021004442_0908f_1628450082_843.jpg)
இதே சம்பவத்தை கண்டித்து, அகில இந்திய கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கரூர் மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமையில் கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கிறிஸ்தவ வாகனத்தின் மீது தாக்குதல்
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 8) மாலை 5 மணி அளவில் திருநெல்வேலியிலிருந்து ஈரோடு நோக்கி கரூர் வழியாக சென்ற கிறிஸ்துவ ஊழிய வாகனத்தில் பைபிள் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததை கண்ட இந்து முன்னணி நிர்வாகி சரவணன் உள்ளிட்ட சிலர் வாகனத்தை வழிமறித்து வாகன ஓட்டுநர் செல்லப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கற்களைக் கொண்டு வாகனத்தின் கார் கண்ணாடியை உடைத்துவிட்டு காரில் இருந்த பைபிள் புத்தகங்களை தூக்கிச் சென்றதுடன் வாகன ஓட்டுநரிடமிருந்து சாவியை பிடிங்கி சென்றுள்ளனர்.
இந்து முன்னணியை தடை செய்க
இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இச்சம்பவத்தை கண்டித்து கிறிஸ்துவ அமைப்பினர் கரூர் நகர காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டனர்.
![வேன் மீது தாக்குதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-kristian-van-attack-karur-rss-member-town-police-case-register-news-vis-scr-tn10050_09082021004442_0908f_1628450082_706.jpg)
அகில இந்திய கிறிஸ்துவ வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் ஏ.ஜி.ஜோஸ்வாஸ் ஸ்டீபன் தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், இந்து முன்னணி இயக்கத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கரூர் மாவட்டத்தில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.