கரூர்: மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு, கரூர் ராயலூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி வீடு, கரூர் வெங்கமேடு கருப்பண்ணசாமி கோயில் தெரு சண்முக செட்டியார் வீடு, கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கார்த்திக் வீடு, கரூர் ஈரோடு சாலையில் அமைந்துள்ள ராமவிலாஸ் துணிக்கடை உரிமையாளர் ரமேஷ் குமார் கடை, கரூர் கடைவீதியில் உள்ள பழனி முருகன் ஜுவல்லரி, கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம், லாலாபேட்டையில் உள்ள திருநாவுக்கரசர் என்பவரது வீடு உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று (ஜீன் 13 ஆம் தேதி) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முன்னதாக காலை 9 மணி அளவில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு அமைந்துள்ள மண்மங்கலம் ராமேஸ்வரப்பட்டி, கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரம் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீடு, கரூர் வெங்கமேடு சண்முக செட்டியார் வீடு, கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணியன் வீடு, அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வேலாயுதம் பாளையத்தில் உள்ள கார்த்திக் வீடு ஆகிய இடங்களில் மட்டுமே சோதனை நடைபெற்றது.
இது தவிர சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறை ஆகியவற்றிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு மேல் லாலாபேட்டையில் உள்ள திருநாவுக்கரசு வீடு, கரூர் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் துணிக்கடை உரிமையாளர் ரமேஷ்பாபு, கரூர் கடை வீதியில் உள்ள பழனி முருகன் ஜுவல்லரி உரிமையாளர் வீடு மற்றும் கடை, கரூர் செங்குந்தபுரம் சாலையில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம் என மொத்தம் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இரவு 11 மணி நிலவரப்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இராமேஸ்வர பட்டி வீடு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு கிளம்பினர். இதுப் போல, மற்ற 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது. ஆனால், கரூர் கடைவீதியில் உள்ள பழனி முருகன் ஜுவல்லரி மற்றும் கரூர் செங்குந்தபுரம் சாலையில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 12 மணியை தாண்டியும் சோதனையை தொடர்ந்தனர்.
தொடர்ந்து இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் சோதனையை தொடலாம் என்பதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே சென்னையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ED Arrest: செந்தில் பாலாஜி கைது - அமைச்சர்கள் கூறியது என்ன?