கரூர் மாவட்டம் தான்தோன்றி ஒன்றியத்துக்கு உள்பட்ட காந்திகிராமம் காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியானது கடந்த 1984ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக உருவெடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
மிகவும் தொன்மையான கட்டடமாக இருந்தாலும், அதனை பேணிக்காத்து தூய்மையாக பராமரித்து வருகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் திடக்கழிவு திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இப்பள்ளியை சாரும்.
இப்பள்ளியில் 10 ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர், கூடுதல் சிறப்பாக 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கென சிறப்பு பெற்ற ஆசிரியர்கள் பாடங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இதில் ஐந்து மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி என அனைத்தையும் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில கல்வி முறைகள் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பள்ளியில் ஆங்கில மொழி பயிற்சி, ஓவியம், நடனம், தையல், யோகா மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என கல்வியைத் தாண்டி பல திறமைகள் மாணவர்களுக்கு புகட்டுகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியை தான் திலகவதி. ஆம் இவர்தான் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்.
இவரின் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
மாநில விருது என்பது எப்பொழுதும் மாநிலத்தின் தலைநகர் பகுதியில் வழங்குவது வழக்கம். ஆனால் பரவிவரும் கரோனா வைரஸ் காலம் என்பதால் தமிழ்நாடு அரசு அளித்துள்ள உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதனை தான் பெருமையாக ஏற்றுக் கொள்வேன். ஏனெனில் என்னுடன் பள்ளியில் படித்த குழந்தைகள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதில் எனது உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
இவ்வாறு ஆசிரியை திலகவதி கூறினார்.
பள்ளி மாணவி சந்திரமதி கூறுகையில், “நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை, குழந்தைகளின் தனித்திறமைகள் முக்கியத்துவம் அளித்து மாவட்ட மற்றும் மாநில அளவில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்வார்.
இதுவரை பள்ளியில் பல மாணவர்கள் அழைத்து சென்று விருது பெற்று இருக்கிறார். திலகவதி ஆசிரியை தனது சொந்த செலவில் ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். உண்மையில் இவரை அயன் உமன் (இரும்பு பெண்மணி) என அழைக்கலாம்” என்றார்.
இந்தப் பள்ளி தற்பொழுது நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக இதனை கருத்தில்கொண்டு இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதுவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பம்” என்றார்.
ஆசிரியை திலகவதி சமூகப்பணி, கல்வி பணி மற்றும் கலை போன்ற பல்வேறு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.
இதேபோல் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோரும் விருதுகள் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கற்பித்தலில் புதுமை: எட்டாக் கனியாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்...!