கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் முதுகலைப்பட்டம் பெற்ற துடிப்பான இளைஞர். இவர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னதாக சென்னையில் பணியாற்றினார். ஆனால், அந்த வேலையில் ஈடுபாடு இல்லாததால், தனது தந்தையுடன் இணைந்து காய்கறி வியாபாரம் செய்ய முடிவெடுத்தார். காமராஜ் மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் நடத்தி வரும் இவருக்குப் புதுமையாக ஏதேனும் செய்வதில் அதிக ஈடுபாடு இருந்தது.
இதனாலேயே கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனை செய்வதை, கரூர் மாவட்டத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார், மகேஸ்வரன். இதில் நல்ல லாபமும் கிடைத்தது. இவருடைய இத்திட்டம் கரோனா காலகட்டத்தில் மக்களிடையே இன்னும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வரவிருக்கும் பருவமழையை நல்ல முறையில் பயன்படுத்த ஏதுவாக, மரம் வளர்ப்பு சார்ந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடிவு செய்தார்.
இதனால் தன்னிடம் காய்கறி வாங்குபவர்களுக்கு இலவசமாக விதைப்பந்து அளித்து வருகிறார். இது மட்டுமின்றி காய்கறிகளுடன், கிருமிநாசினியும் அளித்து வருகிறார். இந்த முன்னெடுப்பு குறித்து மகேஸ்வரனிடம் கேட்கையில், 'சமூக மாற்றம் என்பது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆன்லைன் மூலம் காய்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இலவச விதைப் பந்துகளை வழங்கி வருகிறோம். இதன் மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்த முடியும். வாடிக்கையாளர்களுக்கு மூன்று விதைப்பந்துகள் வரை அளிக்கிறோம். ஒரு விதைப்பந்திற்கு ரூ.1 வீதம் விலை கொடுத்து வாங்குகிறோம். வேம்பு, புங்கை, வில்வம் போன்ற விதைகளை பயன்படுத்தி பந்துகள் தயாரிக்கப்படுகின்றன' என்றார்.
பொதுமக்களுக்கு விதைப்பந்துகளை கொண்டு சேர்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது, வியாபார நோக்கத்தில் இதைச் செய்யவில்லை' என முத்தாய்ப்பாகப் பேசுகிறார், மகேஸ்வரன்.
இதையும் படிங்க: மோடி ஜிந்தாபாத், ஜெய் ஸ்ரீராம்' கூற மறுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்!