கரூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில், கரூர் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அரசு மதுபானக் கடைகளில் 2 வகையான மதுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசு கொள்முதல் செய்யும் மதுபானங்கள் தவிர, பார்களில் 20 ரூபாய்க்கு வாங்கப்படும் மது வகைகள், 200 ரூபாய்க்கு தனியாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மதுவிலக்கு துறை அமைச்சருக்குச் சொந்த மாவட்டமான கரூரில், திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை நடைபெற்றது. இது குறித்து செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் அலுவலர்கள் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்று தந்தது, அதிமுக அரசு. கரூர் அரவக்குறிச்சி பூலாம்வலசு பகுதியில் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் பூலாம்வலசு சேவல் கட்டு போட்டி, நடப்பாண்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டும் நடைபெறவில்லை.
நான் அமைச்சராக இருந்தபோது 3 முறை அனுமதி பெற்று கொடுத்து சேவல் கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் அனுமதி பெற்று கொடுத்து, சேவல் சண்டை நடத்துவதற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சருக்கு நேரமில்லை. கோவையில்தான் அவரை சந்திக்க முடியும்.
கட்டுமான தொழிலில் கம்பி, சிமெண்ட், மணல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கடுமையாக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நாற்கர சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
கரூர் வேலாயுதம்பாளையம் மற்றும் செம்படை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் உள்பட 6 மேம்பால பணிகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில், நான் அமைச்சராக இருந்தபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மூலம் கோரிக்கை மனு அளித்து, தற்போது 2 இடங்களில் பாலப் பணிகள் நிறைவு பெற்று, மற்ற இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு லாரி மணல் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் கேட்பதற்கு நாதி இல்லை. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் நேரடியாக வெற்றி பெற முடியாது என தெரிந்து கொண்டு, குறுக்கு வழியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களை அச்சுறுத்தியும் அடியாட்களை வைத்து கடத்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் தேர்வு செய்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர், பதவியை திமுக குறுக்கு வழியில் கைப்பற்றி உள்ளது. இவற்றுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு.. டெல்லி கொடூரம்!