கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த தங்கராஜ் (63) என்பவர் நஞ்சை புகளூர் பேரூராட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர் ஆவார். தனது ஓய்வுக்குப் பிறகு அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் விவசாய நிலத்தில் இருந்து அவருக்குச் சொந்தமான மாடுகளுக்குத் தீவனம் சேகரிப்பதற்காக, நேற்று மாலை புல் எடுத்துக் கொண்டிருந்த பொழுது தோட்டத்திலிருந்து வந்த விஷப் பாம்பு அவரை கடித்துள்ளது. பயந்து போன அவர் தற்காப்புக்காக பாம்பு கடித்த இடத்தில் துணியை வைத்து இறுக்கமாகக் கட்டியுள்ளார்.
ஆனால், விஷம் உடல் முழுவதும் பரவியதால் சம்பவ இடத்திலேயே தங்கராஜ் உயிரியிழந்துள்ளார். மேலும் தங்கராஜ் மகன் அன்புச்செல்வன் தந்தையைத் தேடி அலைந்த பொழுது தோட்டத்தில் அவர் கிடப்பதைக் கண்டுள்ளார்.
மயக்கமாக இருப்பதாக நினைத்து, அருகிலிருந்த வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தனது தந்தையை அன்புச்செல்வன் கொண்டு சென்றுள்ளார்.
சிகிச்சையில் மருத்துவர்கள் தங்கராஜ் பாம்பு கடித்து உயிழந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு!