கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவரது மனைவி பொம்மியம்மாள் (27). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஆறுமுகத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிவபாக்கியம் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவபாக்கியம் திருமணாகி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், இவர்களின் இந்த பந்தம் குறித்து பொம்மியம்மாளுக்கு தெரியவந்தையடுத்து அவர் ஆறுமுகத்தை கண்டித்தாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில் சிவபாக்கியம், ஆறுமுகம் இருவரும் நேற்றிரவு (ஏப்ரல்.14) தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி சிவபாக்கியம் விஷம் அருந்தி உடனேயே உயிரிழந்துள்ளார். ஆறுமுகம் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதனிடையே கணவர் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்து உறவினர்கள் உதவியுடன் பொம்மியம்மாள் அவரைத் தேடியுள்ளார். அப்போது ஆறுமுகத்திற்கு சொந்தமான வயல் காட்டில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனே இதுகுறித்து தோகைமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் உயிரிழந்த சிவபாக்கியம், ஆறுமுகம் இருவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.