கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வெங்கமேடு, பசுபதிபாளையம், ராயனூர், நொய்யல் போன்ற பகுதிகளில் திமுக தொண்டர்கள் மீது பதிவு செய்யப்படும் பொய் வழக்குகளைக் கண்டித்து அம்மாவட்டத்தின் 51 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக வெங்கமேடு பகுதியில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''திமுகவினர் மீது ஒன்றிரண்டு வழக்குகள் அல்ல. ஒரு லட்சம் பொய் வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்கத் தயார். எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது என்பதற்காகவும், மக்களிடம் அரசின் அராஜகத்தையும் கையாளாகாத்தனத்தையும் கொண்டு சென்று விடக்கூடாது என்பதற்காகவும் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
தேர்தல் சமயத்தில் நடந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி காணொலி ஆதாரம் இருப்பதாகக் கூறினார். ஒன்றரை வருடங்கள் கடந்தும் அவர் இதுவரை அந்த ஆதாரத்தை வெளியிடவில்லை.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கரூர் மாவட்ட ஆட்சியர் உள்பட உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: கரூர் எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!