கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் மலை வீதியில் நேற்று (மே1 ஆம் தேதி) தேமுதிக சார்பில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "திமுக தலைவர்கள் கருணாநிதி, தயாநிதி, உதயாநிதி பெயரில் நிதி என்ற வார்த்தை உள்ளது. அதே போல, அதிமுக தலைவர்கள் பெயரில் தங்கமணி, வேலுமணி, வீரமணி என்று மணி எனும் பெயர் கொண்டுள்ளனர். தேமுதிக எந்த நோக்கத்துக்காக ஆரம்பித்தோமோ அதை அடைந்தே தீருவோம். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே லஞ்ச, லாவண்யம் இல்லாத ஆட்சியைத் தமிழ்நாட்டில் தரமுடியும்.
மினி டிஃபன் பாக்ஸ் மந்திரி: அதிமுகவில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஊழல் செய்ததாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது திமுகவில் சேர்ந்து மின்சாரத்துறை மந்திரி. அவர் மின்சாரத் துறை மந்திரி அல்ல. மினி டிஃபன் பாக்ஸ் மந்திரி. மினி டிஃபன் பாக்சில் கொலுசுகளை வைத்து கோவையில் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கினார்.
தேர்தல் நேரத்தில் மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு விடுகிறார்கள். ஆட்சியாளராக இருந்தால்தான் மக்களுக்குச்சேவை செய்ய முடியும். வரும் தேர்தலிலாவது ஒற்றை விரல் புரட்சியை மக்கள் செய்ய வேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி. இதற்கு திமுக, அதிமுகவே காரணம்.
ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. வெற்றி பெற பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை, அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ளது. தொழிலாளர் பாதிக்கப்படுகிறார்கள். முதலமைச்சருக்குத் தற்பெருமை ஆகாது. மக்கள் போற்றும் ஆட்சியாக மாற்ற தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குங்கள்" எனப் பேசினார்.