கரூர்: கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தை தலித் விடுதலை இயக்கம் (DLM) சார்பில் இன்று (ஜூலை 19) ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் மூலம் 91 அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் அரசு மதுபானக் கடைகளில் அரசு அனுமதியுடன் பார்கள் இயங்கி வருகிறது.
சில காரணங்களால் கரூர் மண்டல மேலாளர், கரூர் மாவட்டத்தில் உள்ள 31 அரசு மதுபானக் கடைகளில் உள்ள பார்களுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், இந்த அனுமதியில்லாமல் 31 அரசு மதுபானக் கடைகளும் இயங்குவதன் மூலம், ஒவ்வொரு கடைக்கும் மாதம் ஒன்றுக்கு லஞ்சப் பணமாக 25,000 முதல் 40,000 ரூபாய் வரை பெற்று வருகிறார். முன்னதாக, தமிழ்நாடு அரசு 500 மதுபானக் கடைகளை மூடுவதாக உத்தரவு பிறப்பித்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் மட்டும் 18 அரசு மதுபானக் கடைகள் மூடுவதாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவற்றில் 7 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. இந்த 7 கடைகளில் விற்பனை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர்கள் அனைவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது வருத்ததிற்குரியது. இந்த நடவடிக்கை என்பது சாதி ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் டாஸ்மாக் மேலாளர் இயங்குகின்றார் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும், மாவட்ட மண்டல மேலாளராக சண்முக வடிவேல் பதவி ஏற்றபோது, அரசு மதுபானக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே அதிகமாக விற்கப்பட்டது. ஆனால், தற்போது பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று பல்வேறு ஊழல்களில் கரூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் ஈடுபட்டு வருகிறார். இது தவிர டாஸ்மாக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர், மேற்பார்வையாளர்களை மிரட்டி வசூல் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, கரூர் பகுதியில் டாஸ்மாக் கடையில் பார் நடத்துவதற்கு கடை ஒன்றுக்கு மூன்றரை லட்சம் பணம் பெற்று இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு மாதம் ஒன்றுக்கு கரூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் சண்முகவடிவேல் 40 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் வரை வருமானம் சட்ட விரோதமாக ஈட்டி வருகிறார்
இது குறித்து, தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் முதன்மை மேலாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் இன்று (ஜூலை 19) டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுவதாக சமநீதி கழகம் மற்றும் தலித் விடுதலை இயக்கம் கூட்டாக அறிவித்து கரூர் மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனிடையே காவல் துறை இன்று முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளது.
இதனை தலித் விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, கரூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் மேற்கொள்ளும் ஊழல்களை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்கும் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கரூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் சண்முகவடிவேலை கைது செய்ய வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சார்பதிவாளர்கள் டெபுடேஷன் முறையில் நியமனம் வெளிப்படையானது – பதிவுத்துறை விளக்கம்