கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனித்தனி அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு முன் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா வெள்ளிக்கிழமை இரவு முதல் இரண்டு மணி நேரம் தாமதமாக பதிவு உள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் தேர்தல் முகவர்கள் அளித்த தகவலின் பேரில், ஜோதிமணி பார்வையிட்டு தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார்.
இருப்பினும் சனிக்கிழமை இரவு வரை சிசிடிவி கேமரா பதிவு நேரம் மாற்றப்படாமல் தற்காலிகமாக கேமரா பதிவு நிறுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் மீண்டும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சிசிடிவி கேமரா உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜோதிமணி கூறியதாவது,
வேடச்சந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை முன்பு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா நேரம் குறைபாடு குறித்து புகார் அளித்தும் இதுவரை கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளில் இருந்து ஒருதலைபட்சமாக நம்பிக்கையற்ற போக்குடன் கரூர் மக்களவைத் தேர்தல் அலுவலர் செயல்பட்டு வருவது ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரின் வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி பதிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காலக்கெடு அளித்தும், சிசிடிவி பதிவுகள் இல்லை என அவர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
பொய் வழக்குகளை பதிந்து ஆரம்பம் முதலே கரூரில் ஒருதலைப்பட்சமான சூழ்நிலையை உருவாக்க ஆளும் கட்சியோடு சேர்ந்து கரூர் மக்களவைத் தேர்தல் அலுவலர் முயற்சித்து வருகிறார். அவர் என்னோடு தொலைபேசியில் பேசிய உரையாடல் அனைவரும் கேட்டிருப்பீர்கள். தொடர்ந்து ஒரு நம்பிக்கையற்ற போக்கோடும், ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டோடும் அவர் செயல்படுவதால் அதிகபட்ச பதட்டத்தை நீட்டிக்கச் செய்கிறது. எனவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்பிக்கையோடு உள்ளோம். எனவே, ஞாயிற்றுக்கிழமை(இன்று) காலை காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங் மற்றும் கபில்சிங் ஆகிய இருவரும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.