கரூர்: அரியலூர் மாணவி தற்கொலை குறித்து, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் தான்தோன்றிமலை காவல்நிலையத்தில் நேற்று(ஜன.28) புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மத மோதல்களை உண்டாக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளித்துள்ளேன்.
தமிழ்நாட்டில் இனி இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபடாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் “அமைதியாக உள்ள தமிழ்நாட்டு மண்ணில் பாஜக திட்டமிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. கலவர அரசியல் பாஜகவுக்கு கைவந்த கலை. தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும். பொய் வீடியோவை பரப்பிய பாஜக மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெற்ற மகளை காப்பாற்ற கணவரை கொன்ற மனைவியை விடுவிக்க முடிவு?