கரூர்: கரூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக உள்ள தோகைமலை திருச்சி சாலையில் கல்லடை ஊராட்சிக்குள்பட்ட அழனாம்பட்டி, ரெங்கநாதபுரம், டி. இடையப்பட்டி பகுதிக்குச் செல்லும் சாலை உள்ளது.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும், இங்கு மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடர் மழையினால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு சாலையின் குறுக்கே ஆற்றின் வழியே மழைநீர் வடிந்துசெல்கின்றது.
![college students protest, beam bridge in karur, protest in karur, thokaimalai protest, போக்குவரத்து பாதிப்பு, கல்லூரி மாணவிகள் போராட்டம், கரூர் போராட்டம், தோகைமலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13663847_386_13663847_1637224609231.png)
கல்லூரிக்குச் செல்லும் சாலையில் ஆற்று நீர் செல்வதால் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, உடனடியாகச் சாலை வசதி, பாலம் கட்டித் தர கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும், பொதுமக்களும் என சுமார் 500 பேர் இணைந்து தோகைமலை - திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாகச் சம்பவ இடம் சென்ற குளித்தலை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், போராட்டம் நடத்திய மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் உயர்மட்ட பாலம் கட்ட தீர்வு வரும் வரை, அவ்விடத்திலிருந்து நகர மாட்டோம் எனத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுவந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை வட்டாட்சியர் விஜயா, பாலம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் 3 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்காக, கல்லூரி மாணவிகள் களத்தில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டிற்கு இடமளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு