கரூர் தனியார் பள்ளியில் கடந்த 19ஆம் தேதி பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நான்கு நாள்கள் கடந்தும் காவல் துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை.
இதனைக் கண்டித்து கரூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் இரவு 7 மணிக்கு மேல் வரை தொடர்ந்தது. இது குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவர்கள் பலரும் போராட்ட களத்திற்கு வந்து வலுசேர்த்தனர்.
மாணவி மனமுடைந்து தற்கொலை
இது குறித்து ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ தனியார் பள்ளி மாணவியை கடந்த 19ஆம் தேதி பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி மாணவி நானாகத்தான் இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளியில் சிறந்த மாணவியாகவும் தைரியமான மாணவியாக இருந்தும் கோவையில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் குறித்தான செய்தியை ஒரு வாரமாக பார்த்துவிட்டு மனம் உடைந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கரூரில் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
ஆறுதல் கூட தெரிவிக்காத அமைச்சர் செந்தில் பாலாஜி
பொதுமக்கள் வேடிக்கை பார்க்காமல் போராட்டத்தில் இணைந்து போராட முன்வர வேண்டும். காவல் துறை இவ்வழக்கை விசாரிக்காமல் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். கரூரில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் கோவையில் மக்கள் பணியாற்றி வருகிறார்.
சொந்த தொகுதியில் பாலியல் துன்புறுத்தலால் கரூர் மாவட்டத்தில் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் கூட தெரிவிக்க நேரில் செல்லவில்லை.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது எங்களது பிரதான கோரிக்கையாக வைக்கிறோம். பள்ளி மாணவிக்காக பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை தொடர இருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்குவந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: Sexual Harassment Case: தலைமறைவான தாளாளர் கோர்ட்டில் சரண்