கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டத்தின் மூலம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார். கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், வருகின்ற 7-ஆம் தேதிக்குள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். இதில் தகுதியுள்ள மனுக்களின் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஒவ்வொறு குறைதீர்ப்பு முகாமில் இருந்தும் 300 முதல் 500 மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி மனுக்கள் அளிக்கும் தகுதியான நபர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மனுக்கள் முதலமைச்சரின் நேரடிப் பார்வைக்கு செல்ல இருப்பதால் அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்களை அலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு மனுக்களில் உள்ள குறைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.