கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட பாவா நகர் பகுதியில் வசித்துவரும் மக்கள் சாலையிலிருந்து மறுபுறம் செல்வதற்கு, அப்பகுதியிலிருந்த பூங்கா வழியாக இருக்கும் சாலையைப் பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது பூங்காவை பாதுகாக்க முற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அவ்வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். இதையடுத்து கடந்த வாரம் நடைபாதை அமைத்துத் தரவேண்டி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். இருப்பினும், அந்த மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று அரவக்குறிச்சி காவல் நிலையம் அருகில் இருக்கும் சாலையில், எவ்வித முன் அனுமதியும் பெறாமல் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சலைமறியலில் ஈடுபட்ட 10 பெண்கள், 15 ஆண்கள் உள்பட 25 நபர்கள் மீது அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!