கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் செல்லப்ப கவுண்டர் தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி கார்த்திக். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு மிதுன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றிற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து சிலர் கார்த்திக்கிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கார்த்திக்கை தனியே அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில், காவிரி ஆறு அருகே வந்த அடையாளம் தெரியாத அந்த கும்பல், கார்த்திக் போதையில் மதுபானக் கடையில் கிடப்பதாகக் கூறி, அவரது இரண்டு வயது மகன் மிதுனை அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி இது தொடர்பாக வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைப் பகுதியில் உள்ள முக்கிய வீதியில் குழந்தையை அந்தக் கும்பல் விட்டுவிட்டு ஓடி சென்றதாகத் தெரிகிறது.
பின்னர் இது தொடர்பாக விராலிமலைப் பகுதியில் வசிப்பவர்கள் சமூக வலைதளங்களில் குழந்தையுடைய புகைப்படத்தை பதிவிட்டனர்.
இதையடுத்து குழந்தையை இழந்த விஜயலட்சுமி, சமூக வலை தளத்தின் மூலம் தகவல் அறிந்து, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் காவலர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:மதுவால் மகனைத் தொலைத்த தந்தை