கரூர்: தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தினம் ஒரு வகை உணவு என்ற அடிப்படையில் சத்தான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலஞ்செட்டியூர் அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சமைத்து வழங்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு எதிராக சாதிய வன்கொடுமை நடந்தது. இந்த சாதிய வன்மைத்தை கண்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்துடன், அப்பெண்ணுக்கு எதிராக செயல்படுவோர் மீதும் பள்ளி குழந்தைகள் மத்தியில் சாதிய வன்மத்தை புகுத்துவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்திகள் இன்று பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு கள ஆய்வு மேற்கொண்டது. கரூர் - திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள தெத்துப்பட்டி ஊராட்சி வேலஞ்செட்டியூர் எனும் பகுதியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள், 30 மாணவர்களளுடன் செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு சமைத்து மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் 9 மணி வரை பரிமாறும் தற்காலிக பணியாளராக அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண், கடந்த ஆக்.26 ஆம் தேதி உணவு சமைத்து வருகிறார். இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கடந்த 10 நாள்களாக அங்கு படிக்கும் 30 மாணவர்களில் 15 மாணவர்கள் உணவு உண்ண மறுத்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் கவனத்திற்குச் சென்றது. செப்டம்பர் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் பள்ளி வளாகத்திற்குச் சென்ற ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், “உணவு அருந்தாத 15 மாணவர்கள் அங்குள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது பெற்றோர் அந்த ஊரில் ஒரு கூட்டம் கூட்டி, பட்டியலின அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்கும் உணவை பள்ளி மாணவர்கள் 15 பேரும் சாப்பிடக்கூடாது என முடிவு செய்திருக்கின்றனர். இதனால் மாணவர்கள் காலை உணவை சாப்பிடவில்லை” என கூறியுள்ளார்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்துப் பேச முடிவு செய்த கரூர் மாவட்ட ஆட்சியர், மாணவர்களின் பெற்றோரை உடனடியாக பள்ளிக்கு வரவழைத்து, “சாதிய பாகுபாடு காரணமாக உணவு உட்கொள்ளாமல் பள்ளி மாணவர்களை தவிர்க்க சொல்லுவது சட்டப்படி குற்றம். தீண்டாமை எந்த வடிவில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என எடுத்துக் கூறி சமதானப்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது மாவட்ட ஆட்சியரின் பேச்சை இடை மறுத்த அங்கு பயிலும் மாணவனின் தந்தை, மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனின் தாய் இருவரும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் எடுத்த முடிவின்படி, தங்களது குழந்தைகள் பட்டியலின பெண் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டார்கள். அப்படி மீறி சாப்பிட்டால் சாமி குத்தமாகும் என கூறினர். மேலும், மாவட்ட ஆட்சியர் நிர்பந்தம் செய்தால், தாங்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்வோம் என கூறியுள்ளனர்.
இதனால் அந்த இருவரையும் எச்சரித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளரிடம் இருவரையும் கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஆய்வை முடித்துக் கொண்டு பள்ளியில் இருந்து கிளம்பினார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் சமையல் பணியாளரிடம் கேட்டபோது, “நான் பிறந்து வளர்ந்து படித்த அதே பள்ளியில் குறைந்த ஊதியம் என்றாலும் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியை விரும்பி செய்துவருகிறேன். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு, காலை உணவு திட்டத்தில் சமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு தரமான முறையில் உணவு தயார் செய்து, குழந்தைகளுக்கு வழங்கி வருகிறேன்.
மாவட்ட ஆட்சியர் செப்டம்பர் 5ஆம் தேதி ஆய்வுக்கு வந்தபொழுது உணவை சாப்பிட்டு, நன்கு சுவையாக உள்ளதாக பாராட்டினார். எனக்கு வழங்கப்பட்ட பயிற்சி மற்றும் எனக்கு இயற்கையாகவே சமையல் செய்யவதற்கு உள்ள ஆர்வத்தால், எனது வீட்டில் குழந்தைகளுக்கு சமைப்பதை போல இங்கு சமைக்கிறேன். மாவட்ட ஆட்சியர் என்னை வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார். உணவு அருந்தாத மற்ற குழந்தைகளின் பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தி, சாதிய வன்கொடுமை பாகுபாடு தவறு என சுட்டிக்காட்டினார். மேலும், குழந்தைகள் சாப்பிடுவதை தடுக்க கூடாது என தெரிவித்தவுடன், என்னை தொடர்ந்து உணவு சமைத்து வழங்க வேண்டும் என கூறிச் சென்றார்” என தெரிவித்தார்.
மேலும், தற்போதுள்ள நிலை குறித்து கேட்டதற்கு, “இன்று பள்ளி விடுமுறை என்பதால் நாளை பள்ளி திறந்தவுடன், காலை உணவு எத்தனை மாணவர்கள் சாப்பிடுவார்கள் என்பது தெரியவரும். அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்கள் நாளை இதனை கண்காணிக்க உள்ளனர். இருப்பினும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் சாதிய மனப்பான்மை மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
தொடர்ந்து, தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில், சமநீதி கழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.அண்ணாதுரை, தோழர் களம் உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “பத்து தினங்களாக காலை உணவு தயாரித்து வழங்கும் பணியினை மேற்கொண்டு வந்த பட்டியகலின அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்தார் என்பதற்காக அங்கு படிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை அங்குள்ள சமூகத்தினர் உணவருந்தக் கூடாது என ஊர் கூட்டத்தின் முடிவானது சாதிய பாகுபாட்டை காட்டியுள்ளது.
மேலும், தங்கள் பகுதியைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கு அவர்கள் நியமிக்கும் சமையல் பணியாளரை கொண்டு தனியாக சமைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியையை நிர்பந்தப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக அனைத்து மாணவர்களும் உணவு உட்கொள்ள அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஆனால், தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வந்ததால் கரூர் மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று பெற்றோரை அழைத்துப் பேசி தீர்வு காண முயற்சி மேற்கொண்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்து, பள்ளியில் இருந்து குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை பெறுவோம் என மாவட்ட ஆட்சியரிடமே ஆதிக்க மனப்பான்மையுடன் பேசிய வரை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுச் சென்றார்.
ஆனால், காவல் துறையோ சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்பு கோரி கடிதம் வழங்கியதால் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறியிருப்பது கண்டனத்திற்குறியது. சாதிய பாகுபாடு வன்கொடுமை எந்த ரூபத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையோ மன்னிப்புக் கடிதம் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளை விடுதலை செய்து சாதிய மனப்பான்மையை ஊக்குவித்து வருகிறது.
இதையும் படிங்க: "அருந்ததியினப் பெண் சமைத்தால் சாப்பிட மாட்டோம்".. வம்பு செய்த நபருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்.. கரூரில் நடந்தது என்ன?