கரூர் பேருந்து நிலையம் எதிரே கடந்த மார்ச் 15ஆம் தேதி திமுக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கரூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,’திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது. ஸ்டாலின் பதவியேற்பு முடிந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் மாட்டு வண்டியில் ஆற்றில் இறங்கி மணல் அள்ளிக் கொள்ளலாம். அலுவலர்கள் தடுத்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். மீண்டும் அந்த அலுவலர் இங்கு பணியாற்ற முடியாது’என சர்ச்சையாகப் பேசினார்.
இது குறித்து அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் மார்ச் 18ஆம் தேதி சென்னையில் தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் கரூர் நகர காவல் நிலையத்தில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், பொது ஊழியருக்கு மிரட்டல் விடுத்தல் என இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153, 189, 505 (1) (b), 506 (1) , 353 511 உள்ளிட்ட 6 பிரிவுகளில் செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அதிமுகவினர் அளித்த புகார் அடிப்படையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.