திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மேற்கு நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கரூர் தாந்தோன்றிமலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தாரணி சரவணன் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், “ மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா அனைத்து துறைகளும் வீழ்ச்சி அடைந்து பொருளாதாரத்தில் படுபாதாளம் சென்றுவிட்டது. பல தொழிற்சாலைகள் மூடு விழா கண்டுக்கொண்டிருக்கின்றன.
பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து வீதியில் நிற்கின்றனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரச்னையை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்புவதற்காகவே, பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் எப்படி மக்களை அச்சுறுத்தி வருகிறதோ, அதுபோல இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரால் பாஜக அரசு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கெல்லாம் மக்கள் படை அஞ்சாது. துணிந்து நின்று போராடும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து நாம் போராடுவோம்” என்றார்.
பொதுக் கூட்டத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : கோடையைச் சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு ’ஆ’வின் மோர்!