கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேலன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி மீனா (25). ஏற்கனவே இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4ஆவது முறையாக மீனா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால், கடந்த மே 7ஆம் தேதி 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
ஆம்புலன்ஸில் மீனா மற்றும் அவரது கணவரை அருகிலிருக்கும் வலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மீனாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய பக்கத்து மாவட்டமான திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல சுகாதாரத்துறை அலுவலர்கள் முடிவு செய்தனர். அங்கிருந்து திருச்சியை நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, மீனாவிற்குப் பிரசவ வலி மேலும் அதிகமானது. நிலைமையைப் புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகேஷ், வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் ரம்யா மீனாவிற்குப் பிரசவம் பார்த்தார். மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து தாயும்-சேயும் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தனது மனைவியின் உயிரையும், தனது குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, மீனாவின் கணவர் வடிவேலன், அவரது உறவினர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.