கரூர்: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியைத் தழுவினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கரூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 28) பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகள் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. அடுத்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக ஆட்சியில் மின்சாரம் உபரியாக இருந்தது.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் அணில்கள் மின்கம்பியில் சிக்குவதால் மின்தடை ஏற்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுவது ஏற்கும்படி இல்லை. இந்தியா உருவானது முதல் அணில்கள் உள்ளன. அதிமுக ஆட்சியிலும் அணில்கள் இருந்தன.
அணிலும், மின் தடையும்
திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா? திடீர் மின் தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாது தொழில்களும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன. எனவே அமைச்சர் இதில் உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
அணில்களால் மின்தடை என்று கூறாமல், அறிவியல்பூர்வமாக அமைச்சர் ஆராய்ச்சி செய்ய வேண்டும். திமுக ஆட்சி ஏற்ற 45 நாள்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடை, தமிழ்நாட்டிற்கு ஒரு முன்னோட்டம்தான். இன்னும் ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்குமோ?" என்றார்.
இதையும் படிங்க: பழங்குடிகள் அனைவருக்கும் தடுப்பூசி: இலக்கை எட்டும் நீலகிரி