கரூரை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது. மாநில துணை தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அண்ணாமலை முதன் முறையாக சொந்த ஊரான கரூர் வந்தார்.
அங்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரூர்- திருப்பூர் எல்லைப்பகுதியான வைரமடை என்ற இடத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் இது அனைவருக்கும் தெரியும்.
கரூர் மாவட்டத்தில் பிஜேபி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் கரூர் மாவட்டத்தில் இரண்டு அல்லது 3 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும். பிரதமர் மோடியின் சிறப்பான அனைத்து திட்டங்களையும் தமிழ்நாட்டிலுள்ள கடை கோடி மக்களுக்கு சென்றடையும்படி செயல்படுவோம். என்னை பொருத்தவரை பிஜேபி என்பது ஆரோக்கியமாகவும், மிக அற்புதமாகவும் தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: மலைப் பகுதியில் கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது!