கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39, 40, 41 வது வார்டு பகுதிகளுக்கு 'மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்' கரூர் காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் நேற்று (ஜன.3) நடைபெற்றது. இம்முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்ய கரூர் மாநகராட்சி மேயர் கவிதா வந்திருந்தார். அப்போது, 'மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்' மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாமல் நூற்றுக்கணக்கான மக்கள் மனுக்களை பதிவு செய்வதற்காக காத்திருந்தனர்.
இதுகுறித்து கேட்டறிந்த மேயர், இன்னும் சிறிது நேரத்தில் இணையதளத்தில் பதியாமல் மனுக்களை பெற முடியாது. எனவே, விரைவாக, மனுக்களை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
அப்பொழுது கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு, தெற்கு காந்திகிராமம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 'கழிவு நீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடும், ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றி முட்புதர்கள் உள்ளதால் விஷத்தன்மையுடைய பாம்புகளின் கூடரமாக மாறியுள்ளது. எனவே, மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும்' என முறையிட்டனர்.
அதற்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, 'சாலை ஓரமாக கொட்டப்படும் குப்பைகளை முழுமையாக அகற்ற மாநகராட்சியால் முடியவில்லை. பொதுமக்கள் தாங்களாகவே தேங்கும் கழிவுநீரை அகற்றி கொள்ள வேண்டும்' என்று கூறியதால், பொதுமக்கள் மேயரிடம் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்குவதாக முறையிட்டனர்.
ஆனாலும் மேயர் கவிதா, கழிவுநீர் வடிகாலை மேற்புறமாக மட்டுமே தூர்வார முடியும். ஹவுசிங் போர்டில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் இணைந்து, கழிவுநீர் வடிகாலில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.
அப்பொழுது, உடன் இருந்த மாநகராட்சி மண்டல தலைவர் ராஜா, மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளரை அழைத்து, பொதுமக்கள் கழிவுநீர் தேங்குவதாக கூறியுள்ள பகுதியின் தற்போதைய நிலையை நேரில் பார்வையிட்டு பின்னர் தன்னிடம் தெரிவிக்குமாறு கூறி, அங்கிருந்து கிளம்பி சென்றார்.
கரூர் மாநகராட்சி மேயர் கழிவுநீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் 'மக்களுடன் முதல்வர் முகாமில்' முறையிட்டும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மனுவை பெற்றுக் கொள்ளாமல், சாலைகளில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சியால் முடியவில்லை, சாக்கடையை எப்படி சுத்தம் செய்வது எனக் கூறிய சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அஸ்ஸாம் பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!