தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் இரண்டு வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய பொருள்கள் வாங்க மக்கள் வெளியில் வந்ததால், கரூர் நகர் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதனிடையே, கரூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த மணிகண்டன் ( 32), பீமராஜா (31) ஆகிய இருவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்று பாலம் பகுதியை கடந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு ஏசி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.
பீமராஜா படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் படுகாயமடைந்த பீமராஜாவை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து, பசுபதிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சொர்க்க ரதம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...