கரூர் மாவட்டம் சனபிரட்டி ஆசிரியர் காலனியில் வசித்துவருபவர் அத்தப்பன். எலக்ட்ரிஷன் வேலைசெய்து வரும் இவர், தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு வீட்டு வரி நிர்ணயம் செய்து தரக்கோரி கரூர் நகராட்சி அலுவலகத்தில் அத்தப்பன் விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு வருவாய் உதவியாளர் ரேவதி, வீட்டுவரி நிர்ணயத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு அத்தப்பன், கரோனா பரவி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தாங்கள் கேட்கும் தொகையை உடனடியாகத் தயார்செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வருவாய் உதவியாளர், முதல் தவணையாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்குமாறும் சான்றிதழ் பெற்றுக்கொண்டவுடன் மீதித் தொகையை வழங்குமாறும் கூறியிருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அத்தப்பன் 10 ஆயிரம் ரூபாய் தயாராக உள்ளது என வருவாய் உதவியாளருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பணத்தினை வீட்டில் வந்து பெற்றுக் கொள்வதாக வருவாய் உதவியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைபேசி உரையாடல் ஆதாரத்தை வைத்துக்கொண்ட அத்தப்பன், இதுதொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்புத் துறை துறையினரிடம் புகாரளித்துள்ளார். பின்னர், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கரூர் நகராட்சி அலுவலகத்தைச் சோதனை செய்தனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கடனுக்கு லஞ்சம், விவசாயிகளிடம் ஆபாச பேச்சு, போதையில் தள்ளாடும் வங்கி அலுவலர் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்