கரூர்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில் 41இடங்களிலும், குளித்தலை, பள்ளப்பட்டி, புகலூர் உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் உள்ள 27 இடங்களிலும், 8 பேரூராட்சிகளில் 31 வார்டுகளிலும் என மொத்தம் 105 இடங்களில் தனித்து தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
கரூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப். 12) கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர், ராயனூர், குளித்தலை பேருந்து நிலையம், அரவக்குறிச்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூர் மாநகராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசிய அண்ணாமலை, "இந்தியா முழுவதும் 172 கோடி தடுப்பூசி முறையாக அனைவருக்கும் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது, மத்திய பாஜக அரசு. ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் மஞ்சள் தூளுக்குப் பதிலாக மரத்தூள், மிளகுத் தூளுக்குப் பதிலாகப் பருத்திக்கொட்டை ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
திமுக ஆட்சி அமாவாசையில் நீடிக்கிறது!
பொங்கல் பொருட்களுடன் பூச்சி, புழு, கரப்பான், பல்லி உள்ளிட்ட அசைவ வகைகளை வழங்கியுள்ளனர். பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் எங்கே என்று தமிழ்நாட்டு முதலமைச்சரின் பட்டத்து இளவரசர், உதயநிதி ஸ்டாலினிடம் கரூரில் பொதுமக்கள் கேட்டால், இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது எனக் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு, இதே கேள்வியைக் கேட்டால் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது எனக் கூறுவார். திமுக ஆட்சி இன்னும் எத்தனை அமாவாசைக்கு ஆட்சியில் நீடிக்கும் என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது நகைக் கடன் ரத்து என்று அறிவித்துவிட்டு தமிழ்நாடு சட்டசபையில் 73 சதவீத பெண்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி வழங்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், பிரதமர் மோடி ரூ. 172 கோடி பேருக்கு முறையாகத் தடுப்பூசியை வழங்கியுள்ளார்.
மறைமுகமாக செந்தில்பாலாஜியை சாடிய அண்ணாமலை
மத்தியில் நேர்மையான ஆட்சியை வழங்கிவரும் மோடியைப் போல், கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்மையானவர்கள். இவர்கள் யாரிடமும் பேருந்தில் டிரைவர், கண்டக்டர், பணி வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடவில்லை. நேர்மையாக இருக்கக்கூடியவர்கள் உங்கள் மாநகராட்சி பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
அதிலும், குறிப்பாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 11 கோடி பேருக்குப் மத்திய அரசு புதிதாக வீடு கட்டிக்கொடுத்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 43 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் கனவுத் திட்டமான மருத்துவ காப்பீடு வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் காப்பாற்றியது மத்திய அரசுதான்!
அடுத்தவர்களின் வெற்றிக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது திமுககாரர்களின் பணியாக உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது, மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியை தாங்கள்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியதாகக் கூறுகின்றனர்.
ஆனால், ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி நிறுவனத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்குத் தடுப்பூசியைக் கொண்டுவந்து ரயில் மூலம் தடுப்பூசியின் வெப்பநிலை குறையாமல் கரூருக்குக் கொண்டுவந்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி அனைவரின் உயிரையும் காப்பாற்றியது மத்திய அரசுதான்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆதரிக்கும் திமுக!
கடைசியாகத் தமிழ்நாட்டில் 14 புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக அரசு அனுமதி அளித்திருந்தது. எதற்காக திமுக அரசு அனுமதி வழங்கியது. நீட் தேர்வு தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பு 100 மருத்துவ இடங்களில் 43 சதவீத இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
தற்போது, மருத்துவப் படிப்பை நீட் தேர்வு மூலம் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் அரசு நிர்ணயித்த குறைந்த கல்விக் கட்டணத்தில் படிக்க முடிகிறது. திமுகவினர் நடத்தி வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எத்தனை என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும் என எட்டு மாதமாகக் கேள்வி எழுப்பி வருகிறேன். ஒருவரும் பதிலளிக்கவில்லை.
எனவே, நீங்கள் திமுகவைப் புறக்கணிக்க வேண்டும். உங்களுக்காக உள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். கடந்த முறை நீங்கள் செய்த தவறை திருத்திக் கொள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பு. உங்கள் பகுதியைச் சேர்ந்த நேர்மையான வேட்பாளர்கள் பாஜகவில் போட்டியிடுகின்றனர்.
அவர்களால் லஞ்ச லாவண்யம் அற்ற நேர்மையான உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி நல்லாட்சி தர முடியும். எனவே நீங்கள் மனது மாறி பாஜகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிங்க:'மதக்கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்ட திமுக!'