கரூர்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு துறை சார்பில் நாட்டின மீன் வகைகள் பெருக்க வேண்டி மீன் குஞ்சுகள் வளர்த்து, அதனை காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நேற்று (டிச. 27) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அரசு அலுவலர்கள், மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் 100% நிதி உதவியுடன் பிரதான் மந்திரி மத்சய சம்படா யோஜனா திட்டம் (River Ranching Programme Under PMMSY) தமிழ்நாட்டில் மேற்கொள்ள ரூ.124 லட்சம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார்.
இத்திட்டத்தின் மூலம் மீன் வகைகளான கட்லா, லோகு, மிர்கால் சினை மீன்கள் ஆகியவற்றை இனப்பெருக்கத்திற்காக சேகரித்து மேட்டூர் அணை, பவானிசாகர், தஞ்சாவூர் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அரசு மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்படும். சுமார் 40 லட்சம் மீன் விரலிகள் தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பவானி, தாமிரபரணி, வைகை ஆற்றில் கிளை ஆறுகளில் இருப்பு செய்யும் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூர் மீன் பண்ணை மற்றும் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் மீன் பண்ணைகளில் இருந்து தூண்டுதல் முறையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்படும். கரூர் மாவட்டத்திலுள்ள 70 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு காவிரி ஆற்றங்கரை ஓரம் ஒரு கிலோமீட்டர் ஒன்றுக்கு, சுமார் 2,000 நாட்டின வகை மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்படும் என கூறினார்.
கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவிரி கரையோரம் உள்ள மீனவர்கள் பயன்பெற உள்ளனர். இது தவிர அமராவதி ஆற்றில் 3.12 லட்சம் நாட்டு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஆறுகளில் நாட்டு இன மீன் வகைகள் அதிகரிக்கப்படுவதுடன் உள்ளூர் மீனவர்களின் நிலை மேம்படுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அளவுக்கதிகமாக ஏரியில் மண் அள்ளிய லாரிகள் சிறைப்பிடிப்பு