கரூர்: ஈரோடு சாலையில் உள்ள ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி ஆத்தூர் பிரிவு ஜே.கே.பி நகர் பகுதியைச்சேர்ந்தவர் ஓட்டுநர் மணிகண்டன் (33). இவரது மனைவி ரம்யா (29). இவர்களுக்கு இளவிழியன் (10) என்ற மகன் இருந்தார். இந்நிலையில், இன்று (செப் 12) காலை 9 மணியளவில் ரம்யா தனது மகனை பள்ளிக்கு அழைத்துச்செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.
கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையான கரூர் பாலிடெக்னிக் அருகில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் வந்த தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் பேருந்து மோதியது. இதில் சிறுவன் இளவிழியன் (10) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இந்த விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிறுவனின் தாய் ரம்யா (29) கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், விபத்து நடைபெற்ற இடத்தில் தனியார் ஜவுளி நிறுவனப் பேருந்தை விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டுநர் தலைமறைவாகி விட்டார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் காவல் துறையினர், இளவிழியனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய தனியார் ஜவுளி நிறுவனப்பேருந்து ஓட்டுநரை வலைவீசித்தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் கொலை வழக்கு... இருவர் கைது