கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம்தோறும் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் 7 மாடிகளில் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
உள்நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை, மதியம் உள்ளிட்ட மூன்று வேளைகளிலும் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவசமாக சத்தான உணவு, பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது மாடியில் உள்ள பெண்கள் சிகிச்சைப் பிரிவில், வழங்கப்பட்ட மதிய உணவில் இரும்பு துண்டு (Iron Bold) ஒன்று கிடந்துள்ளது.
இதுகுறித்து சமூக அலுவலர் சந்திரசேகர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்து வரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மருத்துவக்கல்லூரியில் அவசரப்பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே சிகிச்சையளித்து வருகின்றனர்.
தற்போது நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புத்துண்டு கிடந்திருப்பது நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது தொடர்பாக கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையும் விசாரணையும் மேற்கொள்ள வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: வேலூர் ஆவின் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. தயிர் விநியோகம் பாதிப்பு!