தமிழ்நாட்டில், சட்டப்பேரவைத் தேர்தல் விதிமுறைகள் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி ரொக்கப்பணம் 50 ஆயிரம் ரூபாய்கக்கு மேல் கொண்டுசெல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாங்கல், மோகனூர், காவேரி பாலம் சோதனைச் சாவடி பகுதிகளில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் அமுதா தலைமையிலான பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாங்கல் செக்குமேடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரை தடுத்து நிறுத்தி, அவர் எடுத்து சென்ற மூட்டையை பரிசோதனை செய்ததில் 31 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல், என்.புதூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பெட்டியை பரிசோதித்ததில் 3 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர், இருவரிடமிருந்தும் 34 கிலோ போதைப் பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் குட்கா: 2 பேர் கைது