கரூர் மாவட்டத்தில், கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனியார், அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் கரூர் நகராட்சி ஆணையர் சுதாவின் உத்தரவுபடி, மே.26ல் நகராட்சிக்குட்பட்ட முக்கிய இணைப்பு சாலைகளாக உள்ள செங்குந்தபுரம் சாலை, வையாபுரி நகர் இணைப்புச் சாலைகள், சின்ன ஆண்டாங்கோவில் ரோடு உள்ளிட்ட சாலைகளும், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்தி கிராமம் பகுதியில் வடக்கு காந்தி கிராமம், தெற்கு காந்தி கிராமம், ஹவுசிங் போர்டு உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
இப்பகுதியின் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் வழியில்லாமல் சாலைகளை முழுவதுமாக அடைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். நகராட்சியின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் மொத்தம் 107 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பால், மருந்து மாத்திரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கில் உணவின்றி தவித்த மக்கள் : ஒன்று திரண்டு உதவி இளைஞர்கள்!