கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் என்ற கிராமத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு - வளம் மீட்பு பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் களியக்காவிளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன், காய்கறி சந்தைகள், மருத்துவமனைகள், வீடுகளில் உள்ள குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன.
பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஊழியர்கள் வாகனங்களில் சென்று குப்பைகளை குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இந்தக் குப்பைகள் வளம் மீட்பு பூங்காவில் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் அலட்சியம் காரணமாக மக்கும் குப்பை - மக்காத குப்பைகளை பிரிக்காமல் ஒன்றாக அள்ளி கொண்டு வந்து கொட்டுவதால் இதை வளமாக மீட்க முடியாமல் குப்பை கிடங்கில் மலை போல் குவிந்து சற்று சுவரையும் தாண்டி நிரம்பி வழிந்து வருகிறது.
இது குறித்து மீனச்சல் கிராம மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அலுவலர்கள் இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்த முன் வரவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பல ஆண்டுகளாக மலை போல் தேங்கி கிடக்கும் இந்த கழிவுகளை அப்புறப்படுத்தி இடிந்த சுற்று சுவரை சீரமைக்க அரசு அலுவலர்கள் முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.