கன்னியாகுமரி: குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் காவல் துறையினர் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களைப் பிடிக்கவும், அவ்வாறு பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாகத் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைக் காவல் துறையினர் நிறுத்தினர். அப்போது காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைத் தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல் துறையினரை, சம்பந்தப்பட்ட இளைஞர் தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் தப்பிச் சென்ற இளைஞரை, அவரது வாகன எண்ணைக் கொண்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?