கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட திடல் ஊராட்சியில் 'குண்டு குளம்' என்ற குளம் ஒன்று உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்புள்ள இந்தக் குளம் ஊராட்சி மன்ற பதிவேட்டில் உள்ளது. ஆனால், இதனை தனியார் சிலர் போலி ஆவணங்களைத் தயாரித்து அரசு அலுவலர்கள் துணையுடன் பட்டா மாற்றம் செய்துள்ளதாக அறியப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்தக் குளத்தை மீண்டும் திடல் ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் குளத்தை மீட்க வலியுறுத்தி அந்தப் பகுதி கிராம மக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.