கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
பேச்சிப்பாறை அணையில் விநாடிக்கு 3,331 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து 1,700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பேச்சிப்பாறை மணியங்குழி பகுதியிலுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் நுழைந்தது. அதேபோல் குலசேகரம், பேச்சிப்பாறை சாலை, மங்காடு, முஞ்சிறை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அணை திறந்து விடப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரப் பகுதிகளிலுள்ள தென்னை, ரப்பர், வாழை ஆகிய தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கின.
மங்காடு, முஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளிலும், வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அதேபோல், கனமழையால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகளிலும் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அரசு அலுவலர்களைத் தொடர்பு கொண்டு வீடுகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றும் படி கேட்டுக்கொண்டார்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு சார்பில், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது.
நேற்று (மே.25) மாலை நிலவரப்படி மழை பெய்த விவரம்:
பூதப்பாண்டி 150.4 மி.மீ
சிற்றாறு 188.4 மி.மீ
களியல் 148.0 மி.மீ
கன்னிமார் 154.8 மி.மீ
கொட்டாரம் 167.4 மி.மீ
மைலாடி 236.2 மி.மீ
குழித்துறை 152.0 மி.மீ
நாகர்கோவில் 144.8 மி.மீ
பேச்சிப்பாறை 122.8 மி.மீ
பெருஞ்சாணி 127.8 மி.மீ
புத்தன்அணை 126.2 மி.மீ
சிவலோகம் 86.0 மி.மீ
சுருளோடு 152.2 மி.மீ
தக்கலை 96.0 மி.மீ
குளச்சல் 76.4 மி.மீ
இரணியல் 192.4 மி.மீ
அணையின் நீர்மட்டம்:
சிற்றாறு 16.50 அடி
சிற்றாறு 216.60 அடி
பேச்சிப்பாறை அணை 45.00 அடி
பெருஞ்சாணி அணை 70.50 அடி
பொய்கை அணை 23.20 அடி
மாம்பழத்துறையாறு அணை 54.12 அடி
முக்கடல் அணை 23 அடி
அணைக்கு வரும் தண்ணீர் அளவு:
சிற்றாறு 1 அணை 1,447 கன அடி
சிற்றாறு 2 அணை 560 கன அடி
பேச்சிப்பாறை அணை 3,331 கன அடி
பெருஞ்சாணி அணை 6,525 கன அடி
மாம்பழத்துறையாறு 149 கன அடி
பொய்கை அணை 177 கன அடி
முக்கடல் அணை 19 கன அடி
அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு:
பேச்சிபாறை அணை11,700 கன அடி
முக்கடல் அணை 7.42 கன அடி
மாம்பழத்துறையாறு 149 கன அடி
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்