கன்னியாகுமரி: மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் நாகர்கோவிலில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
கரோனா ஊரடங்கில் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பெரும்பாலான மக்கள் பொது விநியோகத்தையே நம்பியுள்ளனர். ஆனால் நியாயவிலைக் கடைகளில் மிகவும் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இச்சூழலில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் நாகர்கோவில் நியாயவிலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வுமேற்கொண்ட அவர், பொதுமக்களுக்கு முறையாக பொருள்கள் வழங்கப்படுகிறதா என்பதை அங்கிருந்தே கண்காணித்தார்.
அதுமட்டுமில்லாமல், மக்களுக்காக கொடுக்கப்பட்ட அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தரத்தை கையில் எடுத்து பார்த்து உறுதிசெய்தார். நியாயவிலை பொருள்கள் வாங்க அங்கு கூடியிருந்த மக்களிடமும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நியாய விலை கடை ஊழியர்களிடம் தரமான பொருள்களை முறையாக மக்களுக்கு அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். மக்களவை உறுப்பினரின் இந்த திடீர் ஆய்வு, தங்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் உள்ளதாக அங்கிருந்த மக்கள் பூரிப்புடன் தெரிவித்தனர்.